நம் தாய்நாட்டு மண்மீதிலே இற்றைக்குத் தாண்டவமாடும் கோர நிகழ்வுகள், சாதி/ மத/ பதவி/ பண-பிணச் சழக்குகள், ஊழல் தலைவிரித்தாடும் துயரம்/ அறத்தையே காலிலிட்டு மிதிக்கும் வாக்கு வங்கி அரசியல், வெறும் TRPக்காக, குற்றம் செய்துவிட்டு தண்டனையும் பெற்றவரையு விடுதலை வீரராகப் போற்றி, வரிந்து வரிந்து சேதிகளில் திரும்பத் திரும்பக் காட்டுகின்ற மனச்சான்றே இல்லாத கோணல் ஊடகங்கள், கலியுகத்தின் கோரமுகம், காணுமிடமெல்லாம் சுயநலத்தின் பெருங்களியாட்டம், அறச்சீற்றமே இல்லாமல் நடைபிணமாய் மக்கள் வாழும் வாழ்க்கை (எனையும் சேர்த்தே!)
வேளாண்மை செய்பவர் படும் துன்பங்கள், சிறார்/ மகளிர் மேல் பாலியல் வன்மங்கள், வன்முறையாளரின் வாதங்கள்/ தீவினைகள்/மூளைச்சலவை செய்யப்பட்ட கோமாளிகளின் கூப்பாடு, அடிப்படைவாதிகளின் வரம்பில்லாக் குற்றங்கள்/ கொடுஞ் செயல்கள், அவர்களையும் தலைமேலே தூக்கியாடும் மாந்தர்கள்; எதைச் சொல்ல எதை விட?
ஆழிப் பேரலையென/ முள்முடி நுண்தொற்றென இவை அனைத்தையும் ஒரு நொடியில், ஒரே ஒரு அறப்பாட்டால் அழிக்க ஏலாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பாடல்....
===============================================
===============================================
அறப்பாட்டு அரற்றியதே நெஞ்சம்......
===============================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க,
வியன்கவி யத்தனை விண்டேனிங் காயின்
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசு மென்னுள்ளே பொங்குந் துயரம்!
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்!
விதியென் றிதையே உரைத்தாலு மென்றன்
கொதிக்கு முளமெனைக் கொல்கிறதே! உண்மை!
நெறித்தே பிழையென நீதியும் கேட்கும்
வெறுத்த நினைவுகள்; வேதனை கொண்டே
பிறக்கு முயிரும் புவியில் நிலையா
தறுக்கு மறப்பாட் டரற்றியதே உள்ளம்!
முற்றுமொரு பாடம்; முதலுமொரு பாடம்!
சுற்றமொரு பாடம்; சுமத்த லொருபாடம்!
நிற்றலொரு பாடம்; நிகழ்வு மொருபாடம்!
கற்றலொரு பாடம்; கருவு மொருபாடம்!
வெற்றுமொரு பாடம்; விசன மொருபாடம்!
பற்றுமொரு பாடம்; பரிவு மொருபாடம்!
குற்றமொரு பாடம்; குறையு மொருபாடம்!
உற்றதொரு பாடம்; உறவுகளும் பாடம்!
கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்க,
அரிக்குந் துயரத்திற் காளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி னியல்பற, எண்ணம்
வரித்த தமிழே மருந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக