காதலிப்பது பெரும் குற்றமல்ல. காதலும் பெரும் குற்றமல்ல. ஆனால் இன்றைய கால கட்டத்தில், உணர்வு மேலிட்டு காதலிப்பதாக நினைத்துக் கொண்டு, ஒருதலையாக விருப்பங்களை வளர்த்துக் கொண்டு, நங்கையரின் உள்ளங்களை, இளைஞர்கள் காயப்படுத்துவதும், இளைஞர்களின் இதயங்களை மங்கையர்கள் நோகடிப்பதும் தேவைதானா?
இந்த வாலன்டைன் நாள் என்பதே, முதன் முதலாக வாலண்டைன் என்கிற பாதிரியார், பொதுவான பாசத்திற்கும், பரிவுக்கும், பற்றிற்கும், காதலுக்கும், நேசத்திற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும், ஒர் அடையாளமாக முன்னிறுத்தியதே. காதலை, நேசத்தை, மதித்துக் கொண்டாடுகின்ற மனிதர்களில், கறுப்பு மனங்கள் சில, மனிதநேயத்தை மிதிப்பது மட்டும் நிற்கவே இல்லை! (இப்போது நிறையவே முன்னேறி விட்டார்கள் உள்ளங்களைக் காயப் படுத்துவது போய், உடல்களைக் காயப்படுத்தி, உயிரைக்கூட குடிக்கமளவுக்கு வந்துவிட்டார்கள்). கீழ்வரும் பாடல் முன்னரே எழுதியதென்றாலும், இன்னும் சில பத்திகளைச் சேர்த்திருக்கிறேன்.
சுடும் விழிகள்
(கலிவிருத்தம்)
=========================================================
=========================================================
மந்தார வான்மகளின் வடிவானச் சீலையொளிர்
சிந்தூர ஓவியமென் சிந்தையிலோர் கவியெனவே
வந்தூற நானதனை வஞ்சியுனக்(கு) அளிக்கவந்தேன்;
செந்தேறல் சொட்டுகின்ற தீவிழியாற் சுடுவதென்ன?
அள்ளிமனம் கொள்ளையிடும் அந்நிலவைக் கண்டதனால்
வெள்ளமெனப் பொங்கியெழும் மையற்பாட்(டு) உரைக்கவந்தேன்;
துள்ளிவரும் மான்விழிநீ தோகையெனத் தோன்றியெனை
கள்ளெனவே போதைதரும் கருவிழியாற் சுடுவதென்ன?
சில்லென்றே வீசுகின்ற தென்றலது தொடுவதுபோல்
சொல்லத்தான் எண்ணியே தோன்றிவிட்ட என்கவிதை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகத் தரவந்தேன்;
நில்லென்றே நீயுன்றன் நீள்விழியாற் சுடுவதென்ன?
தாவிமனம் நாடுகின்ற தண்டமிழில் வெள்ளன்னத்
தூவியென நெஞ்சத்தைத் தொட்டிசைக்கும் பாட்டெழுதி
நாவினிக்கும் நாயகியே நானுனக்கு சொல்கையிலே
தேவிமுகம் பாராதுன் சேல்விழியாற் சுடுவதென்ன?
கன்னதலன் சாற்றுடனே கற்கண்டைத் தான்சேர்த்து
என்னுள்ளே நான்கலந்து என்காதல் தேனமுதை
பொன்னணங்குன் கைகளிலே பூங்கவியாய்த் தரவந்தேன்
புன்சிரித்தே பாராதுன் பூவிழியாற் சுடுவதென்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக