ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

அறப்பாட்டு அரற்றியதோ....

தமிழை மொழியாக மட்டுமன்றி, பண்ணார் தமிழணங்காக மட்டுமன்றி, பாட்டியல்கள் ஆர்க்கின்ற பண்ணார் தமிழன்னையாகவே, உண்ணும் போதும், உறங்கும் போதும், எண்ணும் போதும், இயங்கும் போதும் எண்ணுவதால், சிலநேரம் உளம்நையும் துன்பநிலை கூட எனக்கேற்படுவதுண்டு.

அறப்பாட்டு அரற்றியதோ உள்ளம்?
(கலிவெண்பா)
=========================================

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=========================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க
வியன்கவி அத்தனை விண்டேனே! ஆனால்;
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசும் என்னுள்ளம்! பொங்குந் துயரம்!

மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தேச்
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்,
விதியென்(று) இதையே உரைத்தாலு(ம்) என்றன்
கொதிக்கு(ம்) உளமெனைக் கொல்கிறதே! உண்மை!

நெறித்தே பிழையென நீதியும் கேட்க
வெறுக்கும் நினைவுகள்; வேதனை கொண்டு;
பிறக்கு(ம்) உயிரே புவியில் நிலையா(து)
அறுக்கு(ம்) அறப்பாட்(டு) அரற்றியதோ உள்ளம்?

கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்கி,
அரிக்கும் துயரத்திற்(கு) ஆளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி(ன்) இயல்பற, எண்ணம்
வரிந்த தமிழே மருந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக