செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

வனிதையவளின் மயக்கெழிலோ......


மயக்கெழிலோ (சந்தக் கவிதை)
==============================















வாலைக் குமரி வெண்ணிலவை
மாலை மறையும் வெங்கதிரோன்
சாலத் தழுவிக் கொண்டதனால்
கோலந் தரிக்கும் விண்மீனோ?

நீலத் திரையின் நுரைமலர்கள்
நீரில் சிதறிய பூக்களெனில்,
ஓலம் எழுப்பும் அலைத் தொடர்தாம்
உன்னிப் பறிக்கும் பெண்கரமோ?

விண்ணில் அதிரும் சுடர்நாணே
மின்னல் அணங்கின் சவுக்கென்றால்,
வண்ணங் கொஞ்சும் வானவில்தான்
வானிற் சிலிர்க்கும் பெருவில்லோ?

ஓங்கி உயர்ந்த பெருமலையே
உள்ளம்  முகிழும் நினைவாயின்
ஆங்கே சூழும்  முகிற்சீலை
அடுக்காய் எழுகும் கவிதைகளோ?

தீங்கனி தருகும் இன்சுவையே
தித்தித் திழுக்கும் தமிழானால்,
தூங்கா தொலிக்கும் முரசந்தான்
சுழன்றே மயக்கும் உன்னினைவோ?

பின்னிப் படருங் கொடிமின்னல்
பெண்ணின் நாண முறுவலெனில்,
என்னின் உள்ளே வெடிக்கின்ற
இசையிந் துடிப்பு இடியாமோ?

மலரில் மோதும் தென்றலது
மனத்தி லுறையும் அன்பனெனில்
மலரில் முகிழ்ந்த மணமதுவே
வனிதை யவளின் மயக்கெழிலோ?

கொட்டிக் கிடக்கும் விண்மீன்கள்
கொடியிற் சிரிக்கும் மலரானால்
எட்டிப் பறிக்கும் பெண்முகமே...
இரவில் எழும்பும் வெண்ணிலவோ?

அலைகள் எழும்ப ஏங்கொலித்தே
ஆர்க்கும் அன்பன் ஆழியெனில்,
மலையில் பிறந்த அருவிமகள்
மடுவை நாடும் பெண்ணணங்கோ?
==================================
ஏங்கொலி = இடையறாதொலி, இரைகின்ற ஓசை

(எ-காட்டு பாடல் கீழே:)

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.!
- (தண்டியலங்கார உரையின் தமிழ் வாழ்த்துப்பா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக