வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கவிதை எனக்கொரு மொழி....

முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞன் சொல்கிறான் - கவிதையெனக்குத் தொழிலென்று!  இணையத்தின் இலக்கியப் பொழிலான ”சந்தவசந்தம்” கூகுள் குழுவில் நடைபெற்ற, இணையப் பாவரங்கில், பலரும் கவிதை பற்றி பாட்டிசைத்தனர்.  எனக்குப் பட்டது: கவிதை நானறிந்த இன்னொரு மொழியாக. அதைத்தான் பாடினேன். 
=================================================













=================================================
தமிழ் வணக்கம்:
=================
அலைகடற் சீறலை ஆள்பவர்க் கீறலை,
.....அறமிலாச் சாவியாய் ஆர்த்திடுங் கூவலை,
மலையென வென்றவள்; செய்திடும் பாக்களை,
.....மணந்தரும் பூக்களாய் நெய்திட வைப்பவள்;
உலையெனத் தீயினி லென்னுளம் பண்பட
.....உணர்வினை யூட்டிடு மொண்டமி ழன்னையே!
சிலையென நின்றிடும் மோனமும் போதும்மே; 
 .....சீயமாய்ச் சீறியே காத்திட வாரும்மே!

அவை வணக்கம்
=================
மன்றமவ் வானகம்; மலர்ந்திடும் மீன்களும், 
என்றுமப் பாவலர் வனைந்திடும் பாவெனில்,
கண்ணனின் கீதமாய்க் கருத்தினிற் கூடியே 
கன்னலுஞ் சேர்ந்தவோர் கனிந்திடும் பாகமாய், 
மின்னலுந் தீட்டிய மிளிர்ந்திடுந் தேகமாய்த் 
தென்றலி னன்புடந் தெளிந்துளம் பொங்கிட, 
வென்றிடும் பாக்களை விரைவுடந் தந்திடும்
என்னரும் பாவல! இனிதுநீர் வாழியவே!

தலைவர் வணக்கம்
==================
செம்மொழியின் பாசகவி செந்தமிழிற் பேசுகவி, 
அம்மெனுங்கா லாற்றலுட னள்ளியிடு மாசுகவி, 
இம்மெனுங்கா லிப்புவியி னீனமதை ஊதுகவி, 
அம்புலியா யார்த்துலகி லாதவமால் வாழியவே!

பாவென்றன் மொழி
==================
எண்ணமென இதயத்தி லெழுந்திடுமவ் வெழிலாரும் 
வண்ணமதை வரிகளிலே வடிக்குமென்றன் மொழிவிருப்பைக் 
கண்ணசைவிற் பாப்புனையுங் கவியெனவே கருதாதீர்;
நண்ணுகின்ற நற்றமிழை நயந்தொழுகும் நல்லவன்நான்!

முந்தையரின் முத்தமிழை முழுமனதாய்ப் போற்றாமல்,
விந்தைமிகு பன்மொழியும் விருப்பமுட னேற்காமல்,
வெந்தழலாய் நந்தமிழர் வெறுங்கனவி லெரிவதையே,
செந்தமிழிற் சிந்துகவிச் செதுக்குதலு மொருமொழியே!

பால்வடியும் பாலகர்மேல் பாலியலின் வன்மத்தைச் 
சூல்வளர்த்தத் தாயவளைத் துரத்திவிடுந் துன்பத்தைச்
சேல்விழியைச் சீரழித்துச் சிறகொடிக்கும் புன்மத்தைக் 
கால்மிதிக்கக் கொதிக்குமென்றன் கற்பனையு மொருமொழியே!

மஞ்சொளிரு மந்தியவள் மாலையிடக் கதிரவனும், 
மஞ்சளெனுஞ் சீலையிலே வனைகின்ற சாரத்தை, 
நெஞ்சகமே நெக்குவிடும் நெகிழ்வான நேரத்தைப்
பிஞ்சுகவிப் பொழிந்துவரி புனைவதுவு மொருமொழியே!

முடிதேடி முழுமுதலாம் முதல்வனையே முயலுவதை, 
வடிவேலின் வழுவில்லா வளங்களையே புகலுவதை, 
அடியெடுத்தே அருளரச னருந்தமிழால் முனைகின்ற 
முடிவில்லா மோனமெனும் முகவரியு மொருமொழியே!

தந்தநிற தளிர்க்கரத்தாற் சரிந்திடுமோர் காரொதுக்கிச் 
சிந்திவிடும் வான்துளியைத் தேடுகின்ற ஓவியத்தை, 
வந்தூறி இனிக்கின்ற மனஞ்சொல்லும் காவியத்தைச் 
செந்தேறற் பாவெனநான் செய்வதுவு மொருமொழியே!

ஆண்டவனி னடிதேடி அன்புடனே ஆடுதலை, 
வேண்டுமந்த வேதன்தாள் விரைந்துளமே நாடுதலை, 
ஈண்டிங்கே எடுத்துரைக்க ஈகமன்னன் முயலுகின்ற, 
மாண்பொளிரும் பாவென்னும் வரியும்தா னொருமொழியே!

பறந்தழகாய்ப் புள்ளினமும் பாய்ந்தங்கே பார்முழுதுஞ் 
சிறகடித்தே தானெழும்பச் சிலிர்க்கின்ற தேநிலவைச் 
சிறந்தவொரு சிறுபொழிலின் சிற்றாம்பற் பூமுகையை, 
நறுந்தமிழால் நடைபழகி நவில்வதுவு மொருமொழியே!

நீர்முகந்தே நெடுந்தூரம் நீணிலத்தை நனைக்கின்ற, 
கார்காலக் கருமுகிலாய்க் கவிபொழியுஞ் சீற்றமதை, 
ஆர்த்தெழுந்தே அள்ளியிடு மருந்தமிழி னாற்றலதைச் 
சோர்வலச் சொரியுமென் சொல்லடுக்கு மொருமொழியே!
==================================================
இராச தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக