ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நெகிழ்வான நேரமிதோ.........

இயற்கையை எழுதாத கவிஞர் எவர்? காரிகையைப் பாடாத பாவலர் எவர்?

நெகிழ்வான நேரமிதோ... (கொச்சகக் கலிப்பா)
===========================================















===========================================

மஞ்சொளிரும் அந்தியவள் மாலையிடக் கதிரவனும்
மஞ்சளெனும் சீலையிலே வனைகின்ற சாரமிதோ?
செஞ்சாந்தின் துகள்பூசிச் சிரித்திவளே வாகொதுக்க,
நெஞ்சகமே நெக்குவிடும் நெகிழ்வான நேரமிதோ?

தந்தநிறத் தளிர்க்கரத்தால் சரிந்திடுமோர் காரொதுக்கிச்
சிந்திவிடும் வான்துளியைத் தேடுகின்ற ஓவியமோ?
செந்தேறல் சொட்டுகின்றத் தீஞ்கனியைத் தான்சுவைக்க
வந்தூறி இனிக்கின்ற மனஞ்சொல்லும் காவியமோ?

பறந்தழகாய்ப் புள்ளினமும் பாய்ந்திங்கே பார்ப்பதற்குச்
சிறகடித்தே தானெழும்பச் சிலிர்க்கின்ற தேநிலவோ?
நறுமணமும் நல்லெழிலும் நன்னயமாய்ப் பொலிகின்றச்
சிறந்தவொரு சிறுபொழிலின் சிற்றாம்பல் பூமுகையோ?

நீர்முகந்தே நெடுந்தூரம் நீணிலத்தை நனைக்கின்ற,
கார்காலக் கருமுகிலாய்க் கவிபொழியும் சீற்றமிதோ?
சோர்வகலச் சொல்லடுக்கிச் சொரிகின்றச் சொடுக்கலென
ஆர்த்தெழுந்தே அள்ளியிடும் அருந்தமிழின் ஆற்றலிதோ?

============================================
மஞ்சு = முகில்
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பூமுகை = மலர்மொக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக