ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

எந்தமிழே....

எந்தமிழே! (கொச்சகக் கலிப்பா)
================================================


















================================================
அன்றலர்ந்த ஆம்பலதன் அவிழழகாய் முறுவலிக்கும்
தென்றலிழைச் செழுங்காவின் திருமகளே! தேனமுதே!
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கனியமுதே!
மின்னொளியாய் மிளிர்ந்துநிதம் விளங்குகின்ற நந்தமிழே!

கழறுகின்ற கிள்ளையென, களிக்கின்ற காட்சியென,
எழுகின்ற செங்கதிராய், இழைகின்ற நல்லிசையாய்,
அழகொளிரும் வரிகளினால் அற்புதமாய் உளந்திருடும்
எழிலார்ந்த இலக்கியங்கள் ஏந்திநிற்கும் எந்தமிழே!

கள்ளதனின் போதையெனக் கருத்தேறி கணப்போதில்
வெள்ளமெனக் கரைபுரளும் வியன்கவிதை நான்புனையத்
துள்ளிவரும் குற்றாலத் தூயமலை அருவியென
அள்ளிமனம் கொள்ளையிடும் அமிழ்தனைய அருந்தமிழே!

செறிவான இலக்கியங்கள் சீர்த்திமிகு இலக்கணங்கள்
நறுந்தேனாய்ப் பாக்களுடன் நாவினிக்கும் பாட்டியல்கள்
அறத்துடனே பொருளின்பம் அத்தனையும் தன்னுள்ளில்
சிறப்புடனே எந்நாளும் சீரொளிக்கும் செந்தமிழே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக