வியாழன், 19 செப்டம்பர், 2019

மாயவலை வாழ்வறுமோ?.......

மயக்கங்கள் யாவுமே விலகிவிடும்; வித்தகியின் விதிவழியே உயிராடும் கயிற்றாட்டம் முடிந்துவிடும்.  மாயவலை வாழ்விதும் அறுந்துபடும்.  
================================












================================
மாயவலை வாழ்வறுமே...
================================
விழலதற்கே நீரிறைக்கும் விடியாத வேதனைகள்;
சுழன்றலையும் தூசுகளாய்ச் சுற்றுகின்ற சோகங்கள்!
நிழலெனவே நிதமலையும் நஞ்சடர்ந்த நெஞ்சகத்தில்
அழலெனவே எரிக்கின்ற ஆசையெனும் பூசைகள்!

எங்கெங்கும் அருவமென ஈடணையும், ஏக்கழுத்தச் 
சங்கெனவே முழங்குகின்ற தரங்கமனை வாழ்வியலில், 
சங்கிலியாய்ப் பின்னலிட்டச் சிக்கெடுக்கா நூற்கண்டும், 
அங்கதனைக் கையிலேந்தி அடிநுனியின் தேடல்கள்!

அறுந்தநூல் கையிலெனும் அவலநிலை வாழ்க்கையிலே, 
வெறுங்கனவு மீட்டுகின்ற வேடிக்கை வீதியுலா;
நீறாகப் போகுமிந்த நெடுமரத்து மெய்ந்நாடும், 
பேறான பதவிகள்; பெருஞ்சிறப்பு விருதுகள்;

அத்தனையும் அழுக்காழி அலைவீசி அவித்தெடுக்கும்,
சொத்தையுளத் தாடுகின்ற சூக்குமத்தின் வித்தகங்கள்!
சித்தமதில் சலிப்பில்லாச் சிந்தனயைச் சிலுப்புகின்ற
மத்தென்னும் மாயவலை வாழ்வியலின் தத்துவங்கள்!

புரிதலில்லா பொய்யிதற்கே புதுமையென, பூவுலகின்
அருமையென விருதளித்த அறிஞரும் எவரிங்கே? 
இருந்திறக்கும் வேதனையாம் ஏதிலியின் வாழ்விதற்குக் 
கருமமெனப் பெயரளித்தக் கவிஞரும் எவரிங்கே?

கட்டியவள் தனியன்புங் கருவுயிர்த்தக் கண்மணியின் 
மட்டில்லாப் பற்றுநிறை மயக்கமும் நித்தியமோ? 
வெட்டவெளி வெயிலாய் வெக்கைதரு மனவெளியில், 
தொட்டுறுத்தும் துயர்வலையில் சொடுக்கினிலே சிக்கவைத்தே, 

எழிலுருவும் ஏக்கழுத்த இறுமாப்பும் இற்றுவிழ, 
வழியறியாப் பாலைநிகர் மணல்வீசும் பெருவெளியில், 
அழலெனவே அலைகின்ற அனாதை ஆன்மாவும், 
அழிந்தொருநாள் அருவமென அனைத்துவிட் டேகிடுமே!

கட்டகன்ற நினைவுகளில் கருத்தில்லாக் கனவுகளில், 
சுட்டெரிக்கும் பாலையிலே சுழல்கின்ற வெறுங்காற்றாய்,
எட்டியெனைப் பந்தாடி ஏய்த்துநிதம் சிரிக்கின்றக் 
கட்டில்லாக் கடவுளையே காலமெலாம் கனிந்துணர்வேன்!

எட்டினில் எழுதாத, இடிந்துவிழும் மணல்வீடாய், 
விட்டலின் விதிவழியே உயிராடும் கயிற்றாட்டில், 
விட்டிலென மயங்கொளியை விட்டகலா உயிரிதற்கு, 
மட்டில்லா அவனருளால் மாயவலை வாழ்வறுமே;
===========================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக