மண்ணோடு மண்ணாய் ஆனாலும், எரிக்கின்ற அழலிலே நீறாகப் போனாலும், மணக்கும் கவியாய் மலர்வேன்; வாழ்வேன்.
=============================
===============================
மணக்கும் கவியாய் மலர்வேன்...
===============================
மலர்ந்துமணம் வீசுகின்ற மல்லிகைக்(கு) ஆரும்
மலர்வதைக் கற்றிடச்சொல் வாரோ? - புலர்ந்தநல்
வைகறைப் போதென மாந்தரின் ஆசெனும்
மையிருள் மாய்ப்பதென் மாண்பு. (1)
மாண்டவர் மீள்வரோ வாழ்விலே என்றெண்ணா
தாண்டவன் பேரிலே ஏய்க்கிறார்! - வேண்டும்
மனிதமாம் தாரக மந்திரம் என்னும்
கனிவுறு மெய்யின் கரு. (2)
கருவாய்க் கனிவாய்க் கருத்திற் கனலாய்
விரிவாய் அறிவாய் விளைந்தே - தரிசாய்
வெடிக்குமென் சிந்தனை மேவிய பாட்டைப்
படிப்பதென் பைந்தமிழ்ப் பற்று. (3)
பற்றிடும் பாதைகள் பாம்பெனச் சீறினும்
பெற்றநற் பாடமாய்ப் பீடுக - ளுற்றிடக்
கண்டதைக் கற்பதும் கற்றதைக் கொண்டுளம்
பண்படச் சொல்வதென் பாட்டு. (4)
பாட்டொலி பூட்டிய பைந்தமிழ்த் தேரிலே
பூட்டெவர் போட்டார் புகல்வீர்? - வேட்டதன்
பேரொலி போலவே புன்மையைச் சாய்த்திடும்
பாரதி பாட்டையென் பாடு. (5)
பாடுகள் பட்டுநம் பாரத மாந்தரும்
கூடியே ஒற்றுமைக் கோதுடன் - நாடுகள்
ஏத்திட என்று மிடையறா தாற்றிடச்
சாத்தியம் தேடலென் சால்பு. (6)
சாலெனும் நேர்வழி தன்னை மறந்தவர்
சூலெனும் மேன்மையைச் சூடிய - வாலெழில்
நங்கையின் கற்பு நசித்தல் தடுப்பதே
இங்கீக மன்னன் எழுத்து. (7)
எழுத்தின் விழிப்பாய் எழுகும் முழவாய்
அழலின் குழியாம் அழுகல் - அழிய
பழன விழுவை, பழகு தமிழை
முழங்க விழைவேன் முனைந்து. (8)
முனைவர் படிப்போ முதன்மை விருதோ
வனையும் வரியோ மனிதர் - புனையும்
முகமெனும் மூடியை முற்றும் திறந்தே
அகமதைத் தேடுமென் ஆவு. (9)
ஆவலும் ஆர்த்திடும் ஆட்டமும் பாட்டமும்
மேவிய வாழ்விதும் வீழுமே - சாவெனும்
கணக்கைக் கடந்தே கயமை களைவேன்
மணக்கும் கவியாய் மலர்ந்து (10)
===============================================
வேறு:
============================
கணந்தனில் கருக்கிடும் கருமையின் கருத்தினை
உணர்ந்திடும் உண்மையை வெறுமையின் வலியுடன்
பிணந்தனை நிகர்த்தவர் பெண்மையின் பெருமையை
வணங்கிடா தழித்திடும் மருவினை உரைக்கிறேன்
==============================================
இராச. தியாகராசன்.
பிகு:
அருளரசன் = தியாகராசன், ஈகமன்னன் = தியாகராசன்
பாவானந்தம் = பாப்பிழை, ஆசு = குற்றம், பீடுகள் = சீர்த்திகள்
கோது = சூழ்தல், உளக்களிப்பு, சால்பு = தன்மை, திறன்
சால் = நேர்வழி (வயலில் குறுக்குச்சால் கூடாதென்பது சொலவடை)
வாலெழில் = தூய்மையெழில், பழனம் = வயல், விழு = சிறப்பு,
ஆவு = தனித்து/தனிமை, பசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக