சிவனருட் சிரோன்மணி, காலஞ்சென்ற பாவலர் திருமதி தங்கமணி அம்மையார் அவர்கள் என்னுடன் சேர்ந்து எழுதிய ஒரு பஃது வெண்பா மாலையில் அவரின் பங்கான வெண்பாக்கள். தற்போது, அவரெழுதிய வெண்பாக்களுக்கு பதிலாக நான் வனைந்தவற்றை சேர்த்திருப்பதால், அவரின் மேலான வரிகளைத் தனியாகவே பகிர்கிறேன்:
=====================================================
====================================================
நம்பீசன் நமைக் காப்பான் (பாவலர் தங்கமணி)
====================================================
நமக்கு மறைநாதன் நற்றாள் துணையாம்
சுமக்கும் வினையிடர் தூளாம்!-- இமைக்குள்
விழியின் ஒளியாய் விளங்கும் விடையோன்
எழிலார் திருக்கோலம் இன்பு. (5)
இன்னருளில் வைத்திடுவான் ஈசன் மறைநாதன்
புன்னகைக்கே ஈடாமோ பொன்னகைகள்?-- மன்னனவன்
காணும் உயிர்களைக் காத்திடுவான் அன்பினைப்
பூணும் அணியாய்ப் பொலிந்து. (6)
சிறப்போடு சீர்தரும் செங்கழலார் தாளால்
பிறப்பாகும் துன்பப் பிணிபோம்-- திறப்பாக
ஞான வழிகாட்டும் நம்பனை போற்றிடுவாய்
மோன குருபேர் மொழிந்து. (8)
மொழிக்கு வசமாவான் முந்துதமிழ் அன்பன்
கொழிக்கும் அருளைக் கொடுப்பான் -- பழிக்கும்
வினைக்கஞ்சி முப்போதும் வெண்ணீற்றன் அப்பன்
புனைகழல் வேண்டிப் புகல். (9)
புகலென் றுனதிரு பொற்றாள் பணிவார்
அகமன் றிலுனருளாம் ஆடல்! -- முகிலனும்
வேதனும் போற்றும் விமலா! எளியரைக்
காதலுறும் கண்மலரால் கா. (10)
====================================================
பாவலர் தங்கமணி அம்மையார்
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக