வியாழன், 19 செப்டம்பர், 2019

அமுக்கராக் கிழங்கோ நீ......

தமிழ்த்தாயின் சிலையொடு என்றன் உணர்வுகளைச் சொல்கின்றேன்....

==================================================




==================================================

அமுக்கராக் கிழங்கா நீ......
========================
என்கருத்தை எதிர்க்கையிலே இயன்றவரை எடுத்தியம்பி,
அன்னவரை அணுகியன்பாய் அக்கருத்தை அளிக்கின்றேன்;
என்னுருவை எள்ளியெனை ஏகடியம் செய்கையிலே
அன்பிலியர் என்றறிந்தே அவர்வழியைத் தவிர்க்கின்றேன்!
சிந்தனையை ஏசுகையில் சிந்தைமறந் தெளிதாகப்
புந்தியிலை இவர்க்கென்று புறந்தள்ளிப் போகின்றேன்;
சொந்தமதை தூற்றுகையில் துருபிடித்த அவரெண்ணம்
மந்தமென மனதார மன்னித்தே நகர்கின்றேன்!
உன்மத்தம் பிடித்தலையும் உணர்வில்லாக் கோழையரும்
என்னியல்பை என்வழியை என்பேச்சை என்பொறுப்பை
என்வழக்கை நான்பிறந்த என்சாதி மதப்பெயரால்
வன்மமொடு வைதாலும் வாழ்வியல்பைத் தொடர்கின்றேன்!
எந்தமிழை மிதிக்கையிலே எப்படியோ சினம்மீறி
முந்திவந் தவர்களிடம் முனைந்தெழுந்தே சீறுகின்றேன்:
இந்தநிலை எதற்காக என்றென்றுந் தோன்றியென்னில்
சிந்திக்கும் எந்திறனை சிடுக்காக்கி வைக்கிறதோ?
எவரென்ன சொன்னாலும் எவருன்னைக் குட்டைமதிற்
சுவரென்று வைதாலும் துங்கமணி போலொளிரும்
புவியகத்தின் முதன்மொழியே; பொற்றமிழே; பூம்பாவாய்;
அவித்தழிக்க நீயென்ன அமுக்கராக் கிழங்கோசொல்?
==============================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக