வியாழன், 19 செப்டம்பர், 2019

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே!...

முகநூலில் முதன்முதலாக நான் பகிர்ந்த பாடலிது. ஒருபஃது வெண்பா அந்தாதி மாலை....
=======================================


=======================================

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே... =====================================
இனிக்கின்ற பாட்டா மிழிகின்ற தேனாம்,
தனிந்தநறு முக்கனியின் சாறாம்! - பனித்துகளைப்
பெய்திடுமுன் பால்நிலவுப் பேச்சினிலே அன்றாடம்
பைங்கிளியே நான்பட்டேன் பாடு! (1)

பாடுகின்ற பாட்டினிலும் பச்சைமரக் காட்டினிலும்
தேடுகின்ற என்மனமுந் தேய்கிறதே! - ஆடும்
மயிலழகே! கூவுகின்ற மாங்குயிலே! சொல்வீர்
துயிலின்றி தேடுந் துடிப்பு! (2)

துடிக்கின்ற உள்ளத்தில் தோகையுனை யெண்ணி
அடிவானத் தீக்கனலா யாசை! - வடிக்கின்ற
கண்ணீர்த் துயரமெனுங் காட்டி லெனைப்புதைக்கும்
வெண்மணலாம் காதல் வெளி! (3)

வெளிர்நீல வான்முகிலும் வெந்தெரியப் பற்றும்
ஒளிரந்திப் போதே உரைப்பாய்! - கிளியவளின்
நேச மெனுந்தீயால் நீறாகிப் போனவென்
ஆசை மனத்தேடு தல்! (4)

அல்லியுன்றன் செவ்வாயின் அற்புதமாம் சொல்லமிழ்தோ
புல்லினிதழ்ப் பூம்பனியாய்ப் போனதடி! - சொல்வேன்நான்
காணுகின்ற காட்சிகளில் காலமெல்லாம் நீயென்னை
வாணுதலால் வாட்டும் வனப்பு! (5)

வனப்பென்னும் வாளால்நான் மாய்ந்த கதையை
வனைந்தேனே பாட்டின் வடிவில்! - மனமே
இரும்பாய் இருந்தாலே இன்பம் இசைவாய்
வருமோ இயம்பிடு வாய்? (6)

வாயா லொருசொல் வழங்கிடு வாயெனக்
காயாக் கனிக்கென காத்திருந்தேன்! - தீயால்
எனையே எரித்திட ஏனோ துடிக்கும்
உனையே விரும்பு முளம்! (7)

உளமயக்கப் பூச்சூடு மொண்டொடியே! என்னைத்
துளைக்கின்ற மோனமெனுஞ் சொல்லே! - பளிக்குச்
சிலையுனது கண்கள் சிலிர்த்தநொடி யுண்டேன்
நிலைவாழ்வுத் தேனமுத நீர்! (8)

நீரெல்லைத் தோற்றமாம் நீரந்திப் போன்றொளிரும்
வார்குழ லோவிய மங்கையே! - பேரெழில்
கொஞ்சிடும் கோதையுன் கோலமிவ் வேழையின்
நெஞ்சிலே பற்றும் நெருப்பு! (9)

நெருப்பிலே நெய்திட்ட நேரிழையுன் சொல்லில்
விருப்புடனே தீய்ந்தேனே விட்டில்! - சிரித்தெனையே
கொன்றுகுளிர் காய்ந்திடுங் கோதிழையே! என்வாழ்க்கை
இன்பமிலாத் தீயோ இனி? (10)
================================================== வேறு:
===== வளங்கள் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே!
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடுந் தெண்டிரையே!
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே!
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!
இராச தியாகராசன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக