வியாழன், 19 செப்டம்பர், 2019

வளந்தரும் எந்தமிழே.............

இந்தப் பாடலின் பத்திகளை ஒவ்வொன்றாக பல பாவரங்கங்களில், தமிழ் வாழ்த்தாகப் பாடியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்று சேர்ந்து தமிழுக்கு வாழ்த்தென செய்ய வேண்டும் என்று பல நாட்கள் எண்ணியதன் விளைவு, இந்தக் கட்டளைக் கலித்துறைப் பாடல்.  இவை அனைத்தையும் இசைப்பாடலாகப் பாடியே அளித்திருக்கிறேன்.  (தத்தகாரம்:  தன்ன தனனன தன்னத் தனனன தன்னனனா).
========================================================




==================================================
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வெண்ணிலவாய்,
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்,
மண்ணில் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்,
எண்ண(ம்) உறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு மற்புதமாய்,
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்,
பொன்னின் நிறத்துடன் நித்த(ம்) எழுந்திடும் பொற்கதிராய்,
என்னில் நிறைந்தெனை யென்று(ம்) அணைத்திடும் எந்தமிழே!

சின்னக் குழல்தருந் தண்மை யிசையெனுஞ் சித்திரமாய்,
மின்னல் வடிவென உள்ளம் புகுந்திடும் வித்தகமாய்,
தன்னைத் தருமுயர் தாய்மை யெனும்பெருந் தத்துவமாய்,
என்னை உயர்த்திட யென்றும் வளந்தரும் எந்தமிழே!
   
துள்ளி யெழுந்திரை கத்துங் கடலது சூழ்வதுபோல்,
அள்ளுந் தனித்தமிழ் ஆற்றல் வளர்ந்திட ஆர்ப்பரித்தே,
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே,
எள்ளல் அறவெனை யென்றும் உயர்த்திடும் எந்தமிழே!

உள்ளந் தனைத்தமிழ்ச் சொல்ல துவால்சிறு ஊசியெனக்
கிள்ளி விடும்மொரு கோல மதாய்மனக் கீறலிடும்
கள்ள மிலாதொளிர் செந்த மிழாம்நறுங் கன்னிகையாய்,
எள்ள லிலாச்சுவை அள்ளி வழங்கிடும் எந்தமிழே! 

தண்கரம் நீட்டியே என்னைத் தழுவிடும் தண்ணிலவின் 
வெண்பனி போலவே சில்லிக்க மேவிடும் மென்கதிராய்,
கண்கள் கிறங்கவே கன்னற் சுவைதருங் காரிகையாய்,
எண்ணம் நிறைந்தெனை என்றுங் கவர்ந்திடும் எந்தமிழே!
=======================================================

இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக