சனி, 4 ஆகஸ்ட், 2012

மெய்யான அன்பெனும் வெண்மை...

இணையத்தில் அன்புடன் குழுவில் நடந்த முதல் கவியரங்கில் நான் பாடிய பாடல்.
===========================================================

===========================================================
அன்பென்னும் மெய்ம்மை...
 எண்சீர் ஆசிரிய விருத்தம் 
(கட்டமைப்பு காய்+காய்+மா + தேமா)
===========================================================
வாழ்ந்துவரும் வாழ்க்கையிலே மூன்றாம் மேன்மை
…..வையகத்திற் காணுகின்ற வெண்மை வண்ணம்
தாழ்வெதுவு மில்லாத வாழ்க்கை யன்பு;
…..தனக்குவமை ஏதுமில்லாத் தூய உண்மை;
ஊழ்த்துவரும் வெண்மையிலே வண்ண மெல்லாம்
…..ஊடுறுவி யிருக்கின்ற தன்மை போல
ஆழ்ந்துமனஞ் செலுத்திவிடு மன்பின் வண்ணம்
…..அகண்டவெளித் தத்துவமாம் வெண்மை யன்றோ?

அறமின்றித் தன்னலமாய்ப் பிழைக ளையே
…..அடுக்கடுக்காய் அனுதினமும் செய்வோர் கூட;
செறிவுள்ளத் தூயவன்நான் என்றே சொல்ல
…..சீரொளிக்கும் வெள்ளுடையைக் ஏற்கும் போதில்,
குறையதறு நேர்வழியில் நாளும் நடக்கும்
…..குவலயத்தின் நல்லவர்கள் உள்ளம் என்றும்
சிறந்ததொரு வெண்மையெனும் உண்மை தன்னை
…..செழுமையறு வண்ணமென விலக்கு வாரோ?

உள்ளத்தே யுந்துதலால் உதித்து விட்ட
…..உணர்வுகளை வளப்பமிகு சொற்கள் கொண்டுத்
துள்ளிவருந் தேனருவி போல விங்குச்
…..செந்தமிழிற் கவிதைகளைப் படைக்கும் பேர்கள்
அள்ளிநெஞ்சைக் கொள்ளையிடும் வெள்ளு வாவை
…..அழகாக அருந்தமிழில் விளிக்கும் போதில்
வெள்ளையெனும் நிலவெழிலை இயம்பும் பாடல்
…..உரைக்கின்ற உண்மையதன் மேன்மை காண்மின்!

அரும்பிவிட்ட நம்மருமை மழலை செல்வம்
…..அடுகிநிதம் வாழ்வியலை அறியச் செல்லும்
பெரும்பான்மைப் பள்ளிகளில் திட்ட மென்றே
…..பதித்துவிட்ட சீருடையின் சட்டங் கூட
விரிந்தொளியே வீசுகின்ற மேலின் சட்டை
…..வெள்ளையெனும் தூயநிறம் கொள்ள வேண்டி
வரையறை செய்திருக்கும் முறைமை தன்னை
…..வையகத்தில் நித்தமுமே காணு கின்றோம்.

உலகிலுறை இயற்கையன்னைத் தானுங் கூட
…..உண்மைநலம் பயின்றுவரும் வெண்மை யென்னும்
உளம்வெளுக்கும் வண்ணமதை விலக்கி விட்டால்
…..ஒங்கிநிற்குங் காட்சியெல்லாம் இருட்டைக் கூட்டும்;
நிலமீதிற் றவழ்ந்துவருந் தென்றல் காற்றின்
…..நெருடலிலே நெகிழ்ந்தாடும் மரங்கள் கூடக்
களையிழந்து போர்த்திருக்கும் பசுமை விட்டுக்
…..கண்களுக்குத் தெரியாத உருவைக் காட்டும்.

வானவரு மவுணருமே பழுதாய்ப் பாம்பை
…..மலையென்னும் பெருமத்தில் புரியாய்ச் சுற்றி
ஊன்வருந்திப் பெரும்பாடாய்க் கடைந்த போதில்
…..ஊழ்த்திட்டத் தீநஞ்சைக் கையி லேந்தித்
தேனெனவே அருந்தியதாற் சிவனின் கண்டம்
…..தெளிவான நீலவெழில் கொண்ட தைப்போல்
ஆண்மைமிகு வெண்மைநிறம் தன்னில் சேரும்
…..அத்துணைநி றங்களைத்தா னேற்றல் காணீர்!

வெற்றிபெற வெறுப்பென்னும்வழியை நாடி,
.....வெறுமைவழி விளம்பரத்தில் உழலு வோரே! 
குற்றமிலாக் குவலயத்தின் கோதும் போகும்;
…..குணங்கடந்த கயமைகளின் சூதும் போகும்;
தற்பெருமைத் தேடுகின்ற தருக்கும் போகும்;
…..தானென்ற அகம்பாவச் செருக்கும் போகும்;
அற்புதமாம் வெள்ளன்பு மெய்ம்மை யொன்றே 
…..அவனியிலே நிலைமாறா திருக்கு மிங்கே!
===========================================
இராச தியாகராசன்.

பிகு:
====
வானவர் - தேவர், அவுணர் - அசுரர், பழுது - கயிறு, புரியாய் - சுற்றி வரிந்து,
கோது - குற்றம்/ பிழை, தருக்கு - ஆணவம், செருக்கு - இறுமாப்பு, அவனி - பூமி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக