புதன், 8 ஆகஸ்ட், 2012

மனிதர்களே மாறுங்கள்.......


சந்தவசந்தம் கூகுள் குழுவில் நடைபெற்ற முதல் படப் பாவரங்கில், எனக்களிக்கப்பட்ட படத்திற்காக நான் வனைந்தளித்த பாடலிது.  படம் கீழே!
==============================================

==============================================
தமிழுக்கென் வணக்கம் 
(கட்டளைக் கலித்துறை)
=======================

துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க  நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

தலைமைக்கும் அவைக்கும் வணக்கம் 
(கட்டளைக் கலித்துறை)
====================================

முடங்கா தொளிரும் ஒடுங்கா வலையாம் முகப்பினிலே;
நுடங்கா தெழுந்த படப்பா வியப்பாம் நுமதரங்கில்;
அடங்கா துயர்ந்தே தமிழ்த்தேன் குடிக்கும், அருங்கவிகள்,
தொடங்கித் தொடுக்கத் துடிப்பாய்க் கொடுக்கும் துரைக்கவியே!

இதுவா வாழ்க்கை? மாறுங்கள்! 
(கொச்சகக் கலிப்பா)
======================================================

தூண்டிலிலே தொக்கிநிற்கும் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாது,
காண்பதெல்லாம் கொள்வதுவும் கண்போக்கில் களிப்பதுவும்
மாண்பெனவே மயங்குகின்ற மானிடரே மாறுங்கள்!

தன்னெறியாய்த் தருக்கர்கள் தணிவின்றித் தாரணியில்
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமிலாக் கொடும்பாவ,
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் பாலியலின்
வன்முறையை வாளெடுத்து மாய்த்திடவே மாறுங்கள்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்கள் ஆழ்ந்தூன்ற
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுத்தவரைத் தான்நோக்கி அழுக்காற்றில் வீழ்ந்தழிய,
நெடுங்கல்லாய் நீணிலத்தில் நிற்பவரே மாறுங்கள்!

பணமென்றும் பகட்டென்றும் பழகுந்தீ வழக்கென்றும்
தணலேறி தகிக்கின்ற சழக்கென்றும் சலிப்பில்லா
துணவென்றும், உலுத்தர்கள் உறவென்றும், உழல்வோரே;
கணப்போதில் காலனுயிர் கரக்குமுன்னே மாறுங்கள்!

சங்கிலியாய்ப் பின்னலிடும் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சனைகள் வாதுகளில்
முங்குவதால், முன்னோர்கள் முனைந்தெடுத்த முயற்சிகளும்
மங்கிவிட, வாழ்கின்ற மனிதர்களே; மாறுங்கள்!

உள்ளத்தில் உருவாகும் உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
அள்ளியள்ளி அனுபவிக்கும் அன்பர்களே மாறுங்கள்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென முதலுதற்கே
ஓக்கமிலா தூழ்த்துவிட்ட ஊடகத்தால் உணர்வின்றி
மாக்களென வாழ்கின்ற மாந்தர்களே மாறுங்கள்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை
சுளுவாக  உன்கழுத்தில் தொடையல்கள் விழுவதில்லை
தெளிவாகச் சிந்தித்து திடமாகத் தேர்ந்தெடுத்து
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கு மாறுங்கள்!

உடலுழைப்பில் உருவாகும் உயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே
கடமைகளும் கருத்தேறிக் கண்ணிமைப்பில் வளர்ச்சிகளும்
நடக்குமென்ற நன்னெறிக்கு நலுங்காமல் மாறுங்கள்!

தளர்வின்றித் தயக்கமறச் சலிப்பில்லாத் தவிப்புடனே
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர் கனவகற்றித்
தெளிவாக உழைப்பதுதான் திறன்மிகுந்த தாய்நாட்டின்
வளமான வளர்ச்சிக்கோர் வழியென்றே மாறுங்கள்!
======================================================
பழந்தமிழ்ச் சொற்கள் நாளுக்கொன்றாய் கற்றுக் கொள்
என்று இலக்கணச்சுடர் இரா. திருமுருகனார் எனக்குச்
சொல்லித் தந்தவை நிறைய!

முடங்கர் = முடங்குதல், மெலிவு
ஏக்கழுத்தம் = இறுமாப்பு
ஈடணைகள் = பேராசைகள்
முடந்தை = வளைந்தது, தாழ்ந்தது, கீழானது
முதலுதல் = தலைமையாதல், முன்னிலையாதல், முன்னே நிற்பது
ஓக்கம் = உயர்வு, பெருமை
ஊழ்த்த = முளைத்த, உருவான
தொடையல் = மாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக