திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மனிதம்....

இந்த பாடல் மரத்தடி தளத்தில் வெளியான ஒன்று. (இன்று அந்த தளமே கிடைக்கவில்லை). பின்னர் கூடல் தளம் அதை அவர்களாகவே வெளியிட்டனர்.
========================================================

========================================================

மனிதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)
=================================

ஒருநாளில் மறைந்துவிடும் குமிழாய்ப் போகும்!
…..உயிர்க்குருவிக் கூட்டைவிட்டுப் பறந்தே ஏகும்!
எரிந்துவிழும் பிணங்களையே நேரில் கண்டும்,
…..இறுமாப்பாய் இருந்திடுவேன் என்றே வாழ்ந்தாய்!
இரைந்திரைந்து பொதுநலந்தான் வாழ்க்கை என்றே,
…..இருட்டறையில் தன்னலமே பேணு கின்றாய்!
அருளொளியாய் புறம்பொலிய புதுக்கி நின்றாய்;
…..அகந்தெரிந்தால் உள்ளொளிக்கும் உண்மை நிறமே!

ஆங்கெழுந்தே ஒளிவீசும் பரிதி யொத்தாய்;
…..ஆழ்மனமோ கறுத்திருக்கும் கரியே அன்றோ?
தீங்கிழைக்கும் தீக்குண்டைக் கண்டேன் என்றாய்
…..தீய்க்குமத்தீ யிலெரிவதும் நீயே அன்றோ?
பாங்கெழிலாய் அண்டவெளிப் பாலமிட்டாய்;
…..பாய்ந்தேகும் உன்மனத்தை ஆள்வ தென்றோ?
ஓங்குமலை எல்லாமே கையி லென்றாய்;
…..உன்னுள்ளம் அடக்காத ஆசை யுண்டே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக