காதலர் நாளுக்காய் இன்னுமொரு கவிதை...
காதலிப்பது பெரும் குற்றமன்று; காதலிக்கப்படுவதும் பெரும் குற்றமன்று; காதலும் பெரும் குற்றமன்று. ஆனால் இன்றைய கால கட்டத்தில், வெறும் பருவ உணர்வு மட்டுமே மேலிட, காதலிப்பதாக எண்ணிக் கொண்டு, ஒருதலையாய் விருப்பங்களை வளர்த்துக் கொண்டு, நங்கையரின் உள்ளங்களை, நல்லிளைஞர்கள் காயப்படுத்துவதும், இளைஞர்களின் இதயங்களை மங்கையர்கள் நோகடிப்பதும் தேவைதானா? இந்த வாலன்டைன் நாள் என்பதே, முதன் முதலாக வாலண்டைன் என்கிற பாதிரியார், பொதுவான பாசத்திற்கும் நேசத்திற்கும் ஒரு அடையாளமாக முன்னிறுத்தியதே. பின்னர் காலவோட்டத்தில் காதலர் நாளென மாறிவிட்டது. நிற்க…
இன்னொரு விவரம். நேர்மையான காதலர்களாய், காதலர் நாளினை "காமன் பண்டிகை" என்று பெயரிட்டு உயர்வாக ஏத்தியவரும், "களவொழுக்கம்" என்று காதலை உயர்வாகப் போற்றியவரும் நந்தமிழரே! திருமணத்துக்கு முன்பாக விரும்புபவரைக் காதலிக்கலாம்; திருமணத்தின் பின்னர் சேரிணயரையும் காதலிக்கலாம். எல்லாமே காதல், பாசம், பற்று, பரிவு, நேசம், அன்பு என்கிற வட்டத்துக்குள்ளே வருவனதானே!
====================================================================================================
காதலோ காதல் ( வஞ்சி விருத்தம்)
=================================
(கருவிளம், கருவிளம், கூவிளங்காய் என்ற கட்டமைப்பு)
====================================================
புவியதில் நிறைந்திடும் காற்றெனவே
தவமென உணர்வுகள் ஊற்றெடுக்கக்
குவிந்திடும் கனலெனும் வேதனையைக்
கவிந்திடும் கெழுதகைக் காதலென்பார்!
கருத்தினைக் கவர்ந்திடு மன்பினையே
சுருக்கினில் அவருயிர்க் காதலதாய்
விருப்புடன் நினைத்திடும் அற்புதத்தை
அரும்பிடும் அமரமென் றேத்திடுவார்
அழகிய மலர்வனக் காட்சியிலும்
எழுந்திடும் நிலவதன் சாட்சியிலும்
தழுவிடும் உருவெளித் தோற்றமதாய்க்
குழுவினில் கவிதைகள் தீட்டிடுவார்!
அலர்ந்திடும் மலர்வனப் பூக்களதும்,
நலந்தரும் இறைவனைச் நாடுதல்போல்,
நிலமதில் செழுத்திடுங் காதலுக்காய்,
வலம்வரும் மனிதரும் தேடிடுவார்!
பழுதறு நனைவொளிர்க் காதலதை,
அழுதிடும் அவர்மன வேதனையை,
முழுமனம் மயங்கிட நித்தமுமே
வழுவறப் பலமுறை கூறிடுவார்!
அனைத்துமே சரியெனச் சொல்பவரே;
வனிதையர், வருத்தமில் வாலிபரே!
அனுதினம் உயர்ந்தநல் வாழ்வியலை
மனிதனாய் புரிதலே தேவையன்றோ!
=======================================
இராச தியாகராசன்
பிகு:
====
கெழுதகை = நெருங்கிய தோழமை/ உரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக