புதன், 8 ஆகஸ்ட், 2012

என்..............?

தற்போது இணையத்தின் சிறந்த கூகுள் மரபியற் குழுவான சந்தவசந்தத்தின் பாவலர் சந்தரவர்  தலைமையில், 35ஆவது பாவரங்கில் “என்”   என்றவொரு நீள் பொருளடக்கிய தலைப்பினில் நான் வாசித்தளித்த, கவிதை இது:-  சந்தவசந்தம் குழுவின் இணைய இழை: http://www.groups.google.com/group/santhavasantham
=====================================

=====================================

என்றன் தமிழே! (கட்டளைக் கலித்துறை)

விண்ணி லுலவிடுந் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்
மண்ணிற் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்க்
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்
எண்ணம் நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனு மற்புதமாய்க்
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்ப்
பொன்னின் நிறத்துடன் நித்த மெழுந்திடும் பொற்கதிராய்
என்னி லுறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!
=====================================
என்றன் கோவே! (இன்னிசை வெண்பாக்கள்)

காதலும் காவியமும் காட்சிக் கனவுகளும்
மோதலும் மோசமும் மொய்க்குமிப் பூவுலகில்
வேதவித்து போலெண்ணி, விந்தைத் தலைப்பதற்கே
ஈதென் கவியுரை இன்று!

மாமணியாம் சந்தரவர் மாவரங்கில் செந்தமிழ்ப்
பாமணியாய் நாமணக்கப் பாவிசைப்போர் தம்மிடையில்
தாமதமாய் வந்துற்றேன்; தத்துநடைச் சின்னவனைச்
சேமமுறக் காத்திடுவீர் சேர்த்து!
======================================
என்றன் இறையே! (கலி வெண்பா)

எண்ணக் கடலது என்று மிரைந்திட
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்
கண்ணன் குழலினில் கன்னற் சுவையினில்
விண்ணும் கிறுக்கிடும் மின்னல் கொடியினில்
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்
பண்கள் புனைந்திடப் பாட்டும் இசைத்திட
மண்ணின் கவியென என்னைச் செதுக்கவே
என்னி லுறைந்தவ ளே!
======================================
என்றன் மன்றே! (வெண் கலிப்பா)

தெள்ளுதமி ழினழிப்போர் சிதறிவிட வெடித்தெழுந்து
அள்ளுகின்ற அழகுச்சீர் அடுக்கிவிட்ட அடியெடுத்துத்
துள்ளுஞ்சொல் தொடுத்தவரி சொடுக்கிவிடும் கவிஞரையே
உள்ளத்தால் வணங்குகிறே னோர்ந்து!
======================================
என்றன் திருவே! (இயற்றரவிணை கொச்சகக் கலிப்பா)

என்னைக் கவிதை இயற்ற உரைத்தவராம்,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
என்னி லுணர்ந்த எழிலாந் திருவினையே,
முன்னித் தமிழும் முகிழ்ந்த உருவினையே,
பொன்னி னொளியாய்ப் பொலிந்த கதையினையே,
எண்ணம் முழுதும் எழுந்து நிறைந்ததையே,
மின்னு மழகாய் விரிந்தே யொளிர்ந்ததையே,
சின்னக் கவியாய் செதுக்கி யுரைத்திடுவேன்!
======================================
(வேறு)
என்றன் எழிலே! (இன்னிசை வெண்பாக்கள்)

கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்
பின்னல்கள் சிக்கலெனப் பீடிக்கும் ஆசையற
இன்றிங்கே நானறிந்தேன்; என்றென்றும் எந்தமிழே
என்னை உயர்த்து மெழில்!

புன்மையெனுந் தீயதனில்  புத்தழகுப் பொய்யதனில்
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்துழல,
முன்னவரின் நற்செயலால் முத்தமிழே காவலென
என்னை உயர்த்து மெழில்!

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இப்பிறப்பாம் ஆழியிலே,
என்னுள்ளம் ஓயா தெரிகையிலே, நான்வணங்கும்
உன்னதமா யென்னுள்ளே உட்போந்த செந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே
அன்பதனை ஆற்றலினை அங்கெங்கோ தேடுகையில்
தன்னறிவாய் சத்தியத்தைத் தந்துவிட்ட தீந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.
====================================
(வேறு)
என்றன் தெளிவே! (வஞ்சிப்பா)

என்வாழ்விலே விளைந்திட்டநல் ஏற்றங்களும்
என்தாழ்விலே முளைத்திட்டசொற் றூற்றல்களும்
என்னாற்றலால் தான்வந்ததாய் அன்றெண்ணினேன்!
பைந்தமிழ்
அன்னையி னருளதால் தெளிகிறேன்,
கண்டதைத் தந்ததுங் கன்னலாந் தமிழே!
====================================
(வேறு)
என்றன் உயிரே! (அறுசீர் விருத்தம்)

என்வாழ்வும் என்வளமும் எனதுயிரும்,
.....என்மெய்யும் உன்னருளா லியங்குதடி!
என்னுள்ளில் நீயிருந்தே இயக்குகிறாய்;
.....எந்நாளுந் தேந்தமிழே இயங்குகிறேன்!
என்னெண்ணம் அத்தனையுந் தமிழதுவாய்,
.....இன்றிங்கே ஆனதுவும் உனதுயர்வால்!
என்வாழ்க்கை இன்றிருக்கும் இயல்பினுக்கே,
.....என்நன்றி சொல்லுவனோ தமிழணங்கே!
==================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக