திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இசையரசிக்கு வாழ்த்து...

இசையரசி திருமதி சுதா இரகுநாதன் அவர்கட்கு வாழ்த்துரைக்கும் போதில் வாழ்த்துப் பாடலில் பல பண்களின் பெயர்களான நாமதேசி, தாமவதி, நவனீதம், நாட்டை நாமநாராயணி, நாக நந்தினி, இராம மனோகரி, செஞ்சுருட்டி, சுவர்ணாங்கி, சிம்மெந்திர மத்யமம், இந்தோளம் ஏமவதி, சலநாட்டை, வம்சவதி, ஸ்ரீராகம், வசந்தா, அம்சவதி, ரூபவதி, கானடா, தானரூபி, மோகனம், தரங்கிணி, தாரிணி, கலாவதி, கல்யாணி, காம்போதி, கனகாங்கி, பைரவி, தில்லானா, வராளி, தர்பார், ஆரபி, இவற்றையே பயன்படுத்தி இருக்கிறேன்.
=====================================================

=====================================================

(கொச்சகக் கலிப்பா)
===================

நாமதேசி தாமவதி நவனீதம் நாட்டையுடன்
நாமநா ராயணியும் நாகமென்ற நந்தினியும்
ராமம னோகரியை ரசனையுடன் பண்ணிசைக்கும்
தேமதுரத் தேனிசையே! சீரணங்கே! வாழியவே!

செஞ்சுருட்டி சுவர்ணாங்கி சிம்மேந்த்ர மத்யமமும்
இந்தோளம் ஏமவதி இனிக்கின்ற சலநாட்டை
வம்சவதி ஸ்ரீராகம் வசந்தாவைப் பண்ணிசைக்கும்
அம்சவதி ரூபவதி ஆர்த்துலகில் வாழியவே!

கானடாவில் அலைபாயும் கலையெழிலை காட்டுகின்ற
தானரூப மோகனமே! தரங்கிணியே! தாரிணியே!
கானமெனும் கலாவதிநீ! காலமெலாம் ஒளிவீசும்
வானகத்து விண்மீனாய் மண்ணுலகில் வாழியவே!

கல்யாணி காம்போதி கனகாங்கி பைரவியும்
தில்லானா வராளியும் சிலுசிலுக்க தர்பாரும்
அல்லிப்பூ வெள்ளையென ஆரபியைப் பண்ணிசைக்கும்
மல்லிகையே மங்கைநீ மணம்பரப்பி வாழியவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக