புதன், 8 ஆகஸ்ட், 2012

நம்பீசன் நமைக் காப்பான்....


திருவாதிரைத் திருநாளுக்காய் (ஆருத்திரா தரிசனம்) அன்றுநான் ஆதீசனை நாயகனாய்க் கொண்டு, எழுதிய ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.  இணைத்துள்ள  படம் அருள்மிகு நஞ்சுண்டேச்சுவர சுவாமி. 

மாதொரு பாகனே, வாகீசக் கூத்தனே, வேதபுரிவாழ் வேதீசனே, சோமீச சுந்தரா, ஆம்பல் வனத்தோனே, ஆரண்ய வாசனே, பாம்பணியும் பசுபதியே, வண்டுதுறை ஈசனே, வாதவூர் நாயகா, இன்னலறு ஏகம்பா, நீனேரி நாதனே, நமச்சிவாயா, மாகாலா, ஆர்கழலாடும் கூத்தனே, புன்னைவனத்து  ஈசனே, சீர்காழி அத்தனே, சிறப்பின் சீர்கழலா, செங்கமலச் சித்தனே, பேரம்பலப் பித்தனே, சிவனருட்சோதியே, அம்பிகை காதலுறும் அழகனே.  உனையன்றி வேறார் துணையிங்கு?
============================

============================
நம்பீசன் நமைக் காப்பான்
============================
காதிருந்துங் கேளாமல் கண்ணிருந்துங் காணாமல்
மாதென்றுஞ் சூதென்றும் மாய்பவரே! - மேதினியில்
மாதோடு பாகனென்ற வாகீசக் கூத்தபிரான்
வேதீசன் தாள்சேர்க வே!  (1)

வேதபுரி ஈசன்நம் வேதனையை தானேற்றுக்
கோதென்று கொள்பாவக் கூத்தறுப்பான் - மோதுமுளச்
சோதனைகள் முற்றும் தொலைத்திடுமே சோமீசன்
ஆதரவுத் தாள்சேர்த லாம் (2)

ஆம்பல் வனத்தானே ஆரண்ய வாசனே
பாம்பணி கின்ற  பசுபதியே! - மாம்பழத்து
வண்டு சிறைவாச மாயவலை ஆசையற
வண்டு துறையீசா வா! (3)

வாதவூர் நாதனுன் வாஞ்சை துணையிருக்க
ஏதெமக்கு நேர்ந்துவிடும் ஏகம்பனே! - நோதலற
நீதியுடன் காப்பிங்கே, நீனேரி நாதன்தாள்
நாதியிலா தாடும் நமக்கு! (4)

நமக்கின்று நாளும் நலங்கள் தரு(ம்)அந்
நமச்சிவத்தை நம்பாமல் நஞ்சை - சுமந்திறும்
சாகாட்டச் சென்னும் சருகெங்கள் வாழ்விதனை
மாகாலா காத்திடவே வா! (5)

வானமும் வையமும் வாழ்க்கையும் ஆர்கழலன்
தானமென்றே காண்பதுதான் சத்தியம் - ஞானப்பேர்
கூத்துவல்யன் பேரருளால் கொள்வோமே எந்நாளும்
பூத்தொளிரும் உள்ளப் பொலிவு! (6)

பொலிவுடனே புன்சிரிக்கும் புன்னைவனத் தீசா!
நலிந்திடுமோ நம்புமிந் நாளே! - கலியகற்றச்
சீர்காழி அத்தன்தாள் தேனாய்த் துதிபாடிச்
சேர்வோரின் வாழ்வே சிறப்பு! (7)

சிறப்பிலங்கும் சீர்கழலா! செங்கமலச் சித்தா!
பிறப்பிலா(து) ஆடுகின்ற பித்தா! - புறத்துநமைத்
தேடிவந்தே  சுட்டெரிக்குந் தீவினையை நாமறுப்போம்
நாடியுன்றன் நாமம் நவின்று! ( 8 )

நவிலும் நமச்சிவ நாமத்தால் நாளும்
புவியில் நனியறம் பூக்கும்! - கவியும்
கவலையைச் சட்டெனப் போக்குமே ஆதி
சிவனருட் சோதியெனுந் தேன்! (9)

தேனென்றும்  பாகென்றும் தீஞ்சுவைச் சாறென்றும்
மானென்றும் மாடென்றும் மாயுமெம் - கூனுளத்தை
மாதவள் பாகனுன் மட்டிலா மெய்யென்னும்
காதலுறு கண்ணருளால் கா! (10)
===================================================
இராச. தியாகராசன்

வேறு:
=====
அடையா யெழுந்து மழையாய்ப் பொழியு
..........மாசை யகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கச் சொரியுந்
..........துன்பம் தொலைந்தேக
கடைய னெனையே கடைக்கண் வழியே
..........காக்க வருவாயோ;
விடையூர்ந் துவரு மதிகை சிவனுன்
..........விந்தை யருளாலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக