வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மரணமிலாக் கவியரசு.....

அக்டோபர் 17 ஆம் நாள் கவியரசர் கண்ணதாசனின் நினைவுநாள்.  அவர்தம் நினைவாஞ்சலியாக இப்பாவலன் எழுதிய பாடலிது.
=============================

===============================
மரணமிலாக் கவி.... (எண்சீர் விருத்தம்)
===============================
படைப்பதனால் நானுமிறை  என்றே கர்வப்
………பாட்டிசைத்துப் படைக்கின்ற கவிஞர் தாமும்,
தடையின்றி தமிழ்மொழியில் நிமிர்ந்தே நிற்க,
………சந்தமணக் கவிமழையாய்ப் பொழிந்து நின்றான்;
கடையனல்ல நானென்றும் இறப்பே இல்லாக் 
………கடவுளடா என்றெழுத்தில் கொக்க ரித்து, 
மடைதிறந்த வெள்ளம்போல் எழுதித் தள்ளி,
………வண்டமிழர் மனத்தைத்தன் வசமே கொண்டான்!

காதற்பா, தோல்விப்பா, கொதித்தே கொட்டுங் 
………காரெனவே வெடிக்கின்ற வெற்றிப் பாக்கள்;
நோதற்பா, வேதப்பா, நகைக்க வைத்து, 
………நொந்தவர்க்கே மருந்தளிக்குஞ் சிரிப்புப் பாக்கள்;
சாதற்பா, மோதற்பா, சீறு கின்ற, 
………சீயமெனப் படிப்பவர்க்கே வீரப் பாக்கள்;
நாதப்பா, நீதிப்பா, நெகிழ செய்து, 
………நலம்விளங்க ஆயிரமாய்ப் புனைந்தான் பாட்டே!

மலர்க்காவாய் மனம்விரும்பும் மழலை தன்னை, 
………மங்கையரை, வஞ்சியரை, வண்ணப் பெண்ணை, 
சிலிர்த்திருக்கச் சிந்தையள்ளும் வெள்ளு வாவை, 
………தித்திக்குந் தேன்பாகாய் இசைத்தான் பாட்டே!
புலர்காலைக் காட்சிகளைப் பனிப்பூப் போர்த்த, 
………பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையை, 
அலர்ந்தழகாய் ஆடுகின்ற அல்லிப் பூவை, 
………அடுக்கிவைத்தச் செந்தமிழில் வனைந்தான் பாட்டே!
=====================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக