இணையச் சகோதரி, பாவலர் திருமதி ஜெயப்ரபா அவர்களின் இலிங்க பைரவி என்ற தலைப்பிலான கவிதையைக் கண்டதும் என்னில் ஊற்றெடுத்த வரிகள் இவை. இவ்வரிகளுக்குக் கிடைக்கும் பாராட்டு அத்தனையும் பாவலர் ஜெயப்ரபா அவர்களுக்கே உரித்து.
=================================================
=================================================
=================================================
=================================================
லிங்க பைரவியே..... (கலித்தாழிசை)
=================================================
அன்றலர்ந்த ஆம்பல்போல் அன்றாடம் புன்சிரிக்குந்
தென்றலிழை பூங்காவின் சீர்மகளே! தேனமுதே!
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கற்பகமே!
மின்னொளி போலிங்கே வீசுமொளிர் வித்தகியே!
....வெண்ணிலவின் தண்மையென வீசுமொளிர் வித்தகியே!
தேடுவதைத் தேடித் தளர்ந்துநான் நிற்கையிலே,
நாடுகின்ற மெய்யை நலுங்காமல் கொண்டிடத்தான்
வாடுகின்ற என்னுளமும் மாரியவள் பேரருளைப்
பாடியே நித்தம் பரவசமாய் ஆடுகின்றேன்!
....பைரவியை எண்ணிப் பரவசமாய் ஆடுகின்றேன்!
பித்தனவன் ஊழாழி பற்றியெனை ஆட்டிவைக்கச்
சித்தினியுன் பாசமெனும் தேன்மாரி காத்துநிற்க,
அத்தனை ஆயிரமாய் ஆட்டத்தை தானடக்கி,
மத்தியிலச் சக்தி மனங்குளிரச் செய்வாளோ?
....மாநிலமே போற்ற மனங்குளிரச் செய்வாளோ?
கள்ளதனின் போதையெனக் கார்முகிலின் தூரலெனத்
துள்ளிவரும் குற்றாலத் தூய்மையதன் சாரலென,
வெள்ளமென நானும் வெடிக்கின்ற பாப்புனைய,
அள்ளிவரம் தந்தருளும் ஆரமுதே! அம்பிகையே!
....அன்பதனால் என்னிலுறை ஆரமுதே அம்பிகையே!
உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்தளிப்பாள் காளி;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்தவென் லிங்க பயிரவியே!
....எழிலாம் வடிவேயென் லிங்க பயிரவியே!
=====================================
இராச. தியாகராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக