திங்கள், 6 ஆகஸ்ட், 2012

நீள்விழியாற் சுடுவதென்ன?.....

இந்த மகளிர்க்கு என்றைக்கும் இதே பணிதான்.  
கண்களாற் சுட்டெரிக்கும் காரிகையர்....
=================================================

=================================================
நீள்விழியாற் சுடுவதென்ன?.....
=============================
மந்தார வான்மகளின் வடிவானச் சீலையொளிர்
சிந்தூர ஓவியமென் சிந்தையிலோர்க் கவியெனவே
வந்தூற நானதனை வஞ்சியுனக்(கு) அளிக்கவந்தேன்;
செந்தேறல் சொட்டுகின்ற சேல்விழியாற் சுடுவதென்ன?

வெள்ளிமலைச் சிகரத்து வெண்பனியாய் ஒளிர்கின்ற, 
சிள்வண்டி னிடையறாத சீண்டலைப்போல் ஒலிக்கின்ற, 
கள்ளவிழும் பூக்காட்டுக் கார்கூந்தல் கன்னிகையுன், 
முள்ளெனவே முறுவலிக்கும் நுள்விழியால் சுடுவதென்ன? 

அள்ளிமனம் கொள்ளையிடும் அந்நிலவைக் கண்டதனால்
வெள்ளமெனப் பொங்கியெழும் மையற்பாட் டுரைக்கவந்தேன்;
துள்ளிவரும் மான்விழிநீ தோகையென வீற்றிருந்தே, 
கள்ளெனவே போதைதருங் கயல்விழியாற் சுடுவதென்ன?

வள்ளையுடன் தென்பாங்கும் வண்ணமெனச் சிந்தொளிரும் 
தெள்ளுதமிழ் சிலிர்க்கின்ற தேன்கவிதை தேவதையே; 
பொள்ளுகின்ற பொம்மலாய்ப் பொழுதென்றும் தோன்றியெனைக்
வெள்ளந்திக் கதைபேசும் வேல்விழியாற் சுடுவதென்ன?

சில்லென்றே வீசுகின்ற தென்றலது தொடுவதுபோற் 
சொல்லத்தான் எண்ணியே தோன்றிவிட்ட யென்கவிதை 
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகத் தரவந்தேன்;
நில்லென்றே நீயுன்றன் நீள்விழியாற் சுடுவதென்ன?

தாவியுளந் தேடுகின்ற தண்டமிழில் வெள்ளன்னத்
தூவியென நெஞ்சத்தைத் தொட்டசைக்கும் பாட்டெழுதி
நாவினிக்கும் நாயகியே நானுனக்கு சொல்கையிலே
தேவிமுகம் பாராதுன் தீவிழியாற் சுடுவதென்ன?

கன்னதலன் சாற்றுடனே கற்கண்டைத் தான்சேர்த்தே 
என்னுள்ளில் பூத்துவிட்ட என்காதற் றேனமுதைப்
பொன்னணங்குன் கைகளிலே பூங்கவியாய்த் தரவந்தேன்; 
புன்சிரித்தே விலகியுன்றன் பூவிழியாற் சுடுவதென்ன?
======================================
இராச. தியாகராசன்.

பிகு:
===
சிந்தூரம் = செஞ்சாந்துத் துகள். செந்தேறல் = நல்ல தேன், சிள்வண்டு = இரவில் சிற்றொலி எழுப்பும் வண்டு, வள்ளை/ தென்பாங்கு = சிந்துப்பா வகை, வண்ணம் = வண்ணப்பா, பொள்ளுகின்ற = பற்றி எரிக்கின்ற, பொம்மல் = அழகு/எழில், வெள்ளன்னத் தூவி = வெண்ணிற அன்னப் பறவையின் மெல்லிறகு. தண்டமிழ் = பனி போன்று குளிர்ந்த தமிழ், முறுவல் = புன்சிரித்தல், நுள்ளுதல் = கிள்ளுதல், நீள்விழி = நீண்ட விழி, சேல்விழி/கயல்விழி = மீனையொத்த விழி, தீவிழி = எரிக்கின்ற விழி, பூவிழி = பூப்போன்ற விழி, கருவிழி = மைதீட்டிய விழி, நுள்விழி = கிள்ளும் விழி. கன்னல் = கரும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக