காதலைப் பாடாத கவிஞர் எவருண்டு? மைவிழியைக் நாடாத ஆடவர் எவருண்டு? (காதலர் நாளுக்காய் கொஞ்சம் முன்னாடியே போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்!!) முகநூலின் கவிதை மன்றமொன்றில், மெய் தீண்டும் மைவிழி என்ற பொருளுக்காக, நானியற்றிய வெண்பாக்கள் இவை:
================================================
================================================
மெய்தீண்டும் மைவிழி! (நேரிசை வெண்பாக்கள்)
================================================
================================================
மெய்தீண்டும் மைவிழி! (நேரிசை வெண்பாக்கள்)
================================================
காதலிலே கண்மயங்கிக் காய்கின்ற வேளையிலே
வேதனையை வேரறுக்க வேண்டுகிறேன்! - ஆதரித்தால்
மையலெனும் என்நேசம் வாழ்ந்துயிர்த்துச் சேர்வேனே
மெய்தீண்டும் உன்"மை" விழி.
முல்லையின் மொட்டனைய முத்துச் சிரிப்பழகால்,
இல்லையெனும் சின்ன இடையழகால், – கொல்லுகின்ற
தையலே! மின்னல் சவுக்கெனவே சாய்க்குடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!
புல்லில் துயில்கின்ற பூம்பனியின் சில்லிப்பாய்,
வில்லின் இழுநாணே மீட்டவெழும் – துள்ளம்பாய்,
பைங்கிளியே! காதற்றேன் பாகினிலே தோய்க்குதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!
காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலைக் காற்றசைக்க,
மாதுன்றன் நீள்விரலால் வாகொதுக்கித் – தூதுவிடும்
வையகத்து வான்நிலவே மாளவெனைத் தேய்க்குதடி
மெய்தீண்டும் உன்"மை" விழி.
அல்லிப்பூ ஆரணங்கே! ஆடகமாய் மின்னுகின்ற,
வில்லாம் புருவத்தால் வீழ்த்தியே – செல்லுகின்ற
கொய்யாக் கனியமுதே! கொஞ்சியெனை மாய்க்குதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!
விண்ணில் விரையும் வெளிச்ச நிலவெனக்
கண்ணில் புகுந்தநற் காரிகையே! - எண்ணியுளம்
நைந்திடவே என்காதல் மண்ணாகச் சீய்க்குதடி
மெய்தீண்டும் உன்"மை" விழி!
கவிஞர்கள் கற்பனையில் காணாத விந்தை;
செவிகளினால் கேளாத சிந்து! – புவியேத்தும்
ஐம்பெருங் பாவியங்கள் அத்தனையும் காட்டுதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!
சுரும்பினைப் போலவே சுற்றிச் சுழன்றே,
கரும்பது தந்திடுங் கள்ளாய் - மருள்கொளச்
செய்தென்னில் நித்தமும் தீக்கதிராய் வாட்டுதடி
மெய்தீண்டும் உன்"மை" விழி!
===============================================
இராச தியாகராசன்
பிகு:
பிகு:
====
ஆடகம் - பொன், பாவியம் - காவியம், சுரும்பு - வண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக