அறு சீர் ஆசிரிய விருத்தமாக முக்கண்ணவனை பற்றி நானியற்றிய பாடல்கள் இவை. கட்டமைப்பு, பொதுவாக மா-மா-மா-மா-மா-காய். நான் வனைந்த முறை: மா-மா-மா-மா-தேமா-புளிமாங்காய். முழு பாடலிலும் 1-7-13-19 சீர்களின் எதுகைத் தொடை அமைந்தது. அது போல மோனைத் தொடை, ஓவ்வோரடியிலும் 1-5 சீர்களில் அமைந்தது. கீழிருப்பது அதிகை வீரட்டநாதர்.
============================================
============================================
எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா
..........லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து
..........பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும்
..........பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின்
..........செங்கண் ணருளாலே!
அடையா யெழுந்து மழையாய்ப் பொழியு
..........மாசை யகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கச் சொரியுந்
..........துன்பம் தொலைந்தேக
கடைய னெனையே கடைக்கண் வழியே
..........காக்க வருவாயோ;
விடையூர்ந் துவரு மதிகை சிவனுன்
..........விந்தை யருளாலே!
============================================
முதல் விருத்தம் பதம் பிரித்து:
எந்தை இன்று இங்கு அளிக்கும் தெளிவால் என்னில் உறைந்தாடும்
பந்தம் என்னும் வலையும் அறுந்து பக்தி எழுந்தோங்க
புந்தி ஆளும் பிழைகள் யாவும் பொள்ளிப் பொசுங்காதோ
சிந்தை மேவும் முக்கண்ணவனின் செங்கண்ணருளாலே.
இரண்டாம் விருத்தம் பதம் பிரித்து:
அடையாய் எழுந்து மழையாய்ப் பொழியும் ஆசை அகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கிச் சொரியும் துன்பம் தொலைந்தேக
கடையன் எனையே கடைக்கண் வழியே காக்க வருவாயோ
விடை ஊர்ந்து வரும் அதிகை சிவன் உன் விந்தை அருளாலே!
சில சொல்லாட்சிகளின் பொருள்:
புந்தி = மனம்/ எண்ணம்
அதிகை சிவன் = அதிகை வீரட்டநாதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக