வியாழன், 2 ஆகஸ்ட், 2012

குடைவானம் கூப்பிடு தூரம்....

இப்பாடல், சந்தவசந்தம் குழுவில் நடந்த 34ஆம் இணையப் பாவரங்கில் பாடியளித்த பாடல்.  கூடவே இதே பாட்டினை வானம் என்ற தலைப்பில் புதுவையில் 17.7.2011 ஞாயிறன்று நடந்த முப்பெரும் விழாவிலும் பாடி அளித்தேன்.
==============================================

==============================================

தமிழ் வணக்கம் (எண்சீர் மண்டிலம்)

தெற்கிலந்தை தமிழுக்கே அள்ளித் தந்த
    தேன்கவியே பாச்சுவைப்போர் மனதைத் தம்மின்
தற்பெருமை இல்லாத உண்மை யன்பால்,
    தம்வயப்ப டுத்துகின்ற ஆற்றல் கொண்ட,
நற்றமிழின் நலம்யாவும் விளங்கு கின்ற,
      நறுங்கவிதை பன்னூறாய்ப் புனையு மெங்கள்,
குற்றமிலாக் கவிமணியே வளங்கள் கோடி
    கொண்டிலங்க அருளரசன் தந்தேன் வாழ்த்தே!

அவை வணக்கம் (எண்சீர் மண்டிலம்) 

விந்தைமிகும் வேய்குழலாம் பாடற் றேனில்,
    வீழ்ந்தளையும் தும்பிகளாய்க் கவியிற் றோய்ந்து,
செந்தமிழாம் நம்மொழியில் முக்கு ளித்து,
    சீறுகின்ற சிலம்பமெனும் ஆட்டம் போல,
வெந்தழலாய் வேகவைக்கும் வெம்மை போல,
      விண்ணூரும் வெண்ணிலவின் தண்மை போல,
சிந்தனையைச் சிலுப்புகின்ற பாவி சைக்கச்,
    செய்கின்ற மன்றிதற்குத் தந்தேன் வாழ்த்தே!

குடைவானம் கூப்பிடு தூரம் (கலித்தாழிசை)

பேசாமல் கேட்கின்றார், பேசியே கேட்கின்றார்;
கூசாமல் கேட்கின்றார், கூட்டாகக் கேட்கின்றார்;
காசாகக் கேட்கின்றார், காதோடும் கேட்கின்றார்;
மாசான மாந்தர்மனம் மாறுதற்கோர் வேளையிது;
…..மாசுணத்தின் நஞ்சிங்கே மாறுதற்கோர் வேளையிது!

நீறாகப் போகும் நிலையில்லா வாழ்வினிலே,
கூறாத கொள்ளையராய் கூசாத கையூட்டில்,
பேறாக செல்வங்கள், பீடுகளை யாள்பவர்கள்,
மாறாரெ னத்தழைந்து வாழ்வதற்கோர் சாவுமணி;
…..வாய்மூடி மூங்கையென வாழ்வதற்கோர் சாவுமணி!

சாவென்னும் சந்திப்பை சத்தியமென் றெண்ணாமல்,
கூவுகின்ற கும்மிகளால், கூடிநிற்கும் கோடிமன
தேவையெனும் தேடுதலால், செந்தழலாய் நெஞ்செரிய
ஆவல்கள் ஆர்ப்பரிக்கும் ஆடலுக்கோர் சாவுமணி;
…..அவலமிகு ஊழலெனும் ஆடலுக்கோர் சாவுமணி!

ஆழியதன் பேரலையால் ஆடுகின்ற அண்டம்போல்,
சூழுகின்ற கூட்டமாம் தூங்கியெழும் மக்கள்முன்,
ஊழலிலே உன்னித்த ஊத்தையாம் உட்கார்கள்,
வீழுதலும் சத்தியமே; வெற்றுச்சொல் இல்லையடி;
…..மிதிபடுவார் நிச்சயமே; வெற்றுச்சொல் இல்லையடி!

கவிந்த குடைபோல கண்களுக்குத் தோன்றும்,
சிவந்த வெளிர்நீலச் சித்திரநீள் வானம்,
செவிதனில் கேட்கும் சிறுதொலைவே என்றால்,
அவியாக் கிழங்கனைய ஆசுகளா வேகாது?
…..அணிதிரண்ட மக்கள்முன் ஆசுகளா வேகாது?

வலையகத்தால் தூரங்கள் மாடெனவே ஆகும்;
தொலைதூர எண்ணங்கள் தொட்டுவிட ஏலும்;
மலைமுகடாம் மாப்புதிர்கள் மங்குலென மாறும்;
நிலையில்லா வாழ்வினிலே நேர்மையதும் ஓங்கும்;
…..நீதிநெறி காட்டுகின்ற நேர்மையதும் ஓங்கும்!
=========================================
தெற்கிலந்தை அள்ளித் தந்த = பாவரங்கத் தலைவர் கவிமாமணி சு. இராமசாமி அவர்கள் இலந்தையெனும் ஊரில் பிறந்தவர்.

நீறாக = சாம்பலாக, பீடுகளை = பெருமைகளை,
மாசுணத்தின் = பெரும் பாம்பின்,
மூங்கையென = ஊமையென,
உன்னித்த = எழுந்த/நிமிர்ந்த,
ஊத்தை = அழுக்கு,
உட்கார்கள் = பகைவர்கள்,
ஆசுகளா = குற்றங்களா, மாடென = பக்கமென,
ஏலும் = இயலும்,
மங்குலென = முகிலென

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக