சந்தவசந்தம் கூகுள் குழுவில் நடந்த பாவரங்கில் நான் வாசித்தளித்த கவிதை இது! (சில இடங்களில் தொடையிலக்கணம் பிறழ்ந்திருக்கலாம் - ஆனால் தோன்றியதை அப்படியே எழுதிய பாட்டென்பதால், எதையும் திருத்தவில்லை!)
====================================================
====================================================
தேடித் தேடி (கொச்சகக் கலிப்பா)
===============================
ஆட்டங்கள் வேண்டுமென்றே ஆர்ப்பரிக்கத் தேடும்நீ;
ஆண்டவனை வேண்டியிங்கே அமைதியைத் தேடுவையோ?
அருகிருக்கு மழகறியா தரிதாரந் தேடும்நீ;
அன்பொன்றே மேலாம்மென் றாய்ந்தறிந்து தேடுவையோ?
இருக்கின்ற தைவிட்டே எங்கெங்கோ தேடும்நீ;
இருளன்ன இறப்பொன்றே இயல்பென்று தேடுவையோ?
உருவாகு முவர்கடலி லுல்லாசந் தேடும்நீ;
ஊரெங்கு முறையும்பே ருண்மைதான் தேடுவையோ?
வசந்தங்கள் வாழ்வென்று வலைவீசித் தேடும்நீ
நிம்மதியைத் தேடாது நிழல்களிலே வெல்வதென்ன?
செந்தழலைத் தளிரென்றும் செம்பனியைத் தீயென்றும்
தேய்ந்தாய்தே தேடும்நீ தேய்ந்தோய்ந்து செல்வதெங்கே?
தினந்தினமுந் தீக்குளியல்; தீராத நெஞ்செரிச்சல்;
இனம்புரியா மூச்சடைப்பு; ஏனிந்த விளையாட்டு?
வித்தகியின் விதிவழியே உயிராடுங் கயிராட்டம்
அத்தனையு ஆசைகளால், ஆவலெனும் பூசைகளால்!
வந்ததுவும் தவறில்லை வளர்ந்ததுவும் தவறில்லை
வெந்தரண வேல்வலியில் வெறுங்கூடாய் வாழ்வெதற்கு?
வீசுகின்ற காற்றலையில் உழல்கின்ற சருகான
பாசவலை வாழ்வொருநாள் பட்டெனவே விட்டுவிடும்!
சங்கிலியாய்ப் பின்னல்கள் சிக்கெடுக்கா நூற்கும்பல்;
அங்கதனைப் பிடித்தபடி அடியதனைத் தேடுகையில்;
அறுந்தநூல் கையில்வர வெறுங்கனவே வாழ்வென்னும்
முடிவுதனைக் காண்கின்றாய்; விடியும்வ ரையிதுவே!
இறங்கிவிட்ட நாள்முதலாய் இருக்கின்ற நாள்வரையில்
உறுத்தாத பேருண்மை; இருப்பிற்கோர் காவல்நாம்!
நெறிமுறையை விட்டுவிட்டு நீயுன்றன் வாழ்வினிலே
அறியாமல் தேடுவதேன்? ஆட்டங்கள் போடுவதேன்?
சிங்காரந் தேடுமுடல் சில்லென்று மாகுமடா!
தங்கத்தைத் நாடுமுடல் தழல்தின்னப் போகுமடா!
பாவங்கள் படிந்துவிட்ட பொய்யான மெய்ப்பைதான்
சீவனெனும் சிவலிங்கம் சிரிக்கின்ற கோவிலடா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக