புதன், 8 ஆகஸ்ட், 2012

எண்ணியுளம் தேம்பியதே!....


மறைந்த முனைவர் இரா.திருமுருகனார்க்காக நான் உளமேங்கி அளித்த நினைவேந்தற் பாட்டு.  தன் உடலைக்கூட மருத்துவ ஆய்விற்காக உவந்தளித்த சான்றோர் அவர். உடல் பொருள் ஆவி அத்தனையும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் ஈந்த ஈகை வேந்தர் அவர். தமிழிசையையும், தமிழிலக்கணத்தையும் ஒரு சேர அறிந்திருந்தவர்கள்/ அறிந்திருப்பவர்கள் வெகுசிலரே. இவ்விரண்டிலும் ஆர்வமிருக்கும் எம்போன்றோர்க்கு அவர்தம் மறைவென்பது பேரிழப்பே!
===============================================
===============================================
திருமுருக!  எண்ணியுளம்  தேம்பியதே!
(நேரிசை வெண்பாக்கள்)
=====================================

தீச்சொரியுஞ் சொல்லே! தெளிதமிழே! கூர்வாளே!
கூச்செரியச் செந்தமிழின் கோதுரைத்த – சூச்சுமமே!
மண்ணுதித்த நம்மினத்தின் மாமறவ! நும்மறைவை
எண்ணியுளந் தேம்பி யது!

இயல்மொழியா மெந்தமிழை ஏற்கா திளையோர்
அயல்மொழிதான் வேண்டுமென் றாடுங் – கயமையினைக்
கண்டுளமே வெம்பியதால் காற்றேறிப் போனீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

சந்தயிசை காட்டுகின்ற தாளத்தைக் கற்றதனாற்
சிந்தென்னுஞ் சீர்மையினைத் தேர்ந்திசையாய்த் – தந்தவரே!
விண்ணகமே நுந்தமிழை வேண்டியதாற் சென்றீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

பாவேந்தர் பாதைவழிப் பாசறையின் போர்வாளே!
மூவேந்தர் காத்துநின்ற முத்தமிழின் – மாவேந்தே!
பண்ணார் தமிழணங்கைப் பாருலகி லார்காப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!

பன்னீரின் பூமழையாய்ப் பாட்டோலைக் கம்பனுக்கும்
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்ப் – பண்ணெமக்கும்
ஒண்டமிழி லீங்கினிமேல் ஓன்றாக ஆர்தருவார்?
எண்ணியுளந் தேம்பி யது!

தண்டமிழிற் றூயகலித் தாழிசையும், வானூருங்
கொண்டலென மூவண்ணங் கொட்டியநற் – பண்ணேறே!
மண்மணக்கும் முத்தமிழ்நாம் மாந்திடவே ஆரிசைப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!
=========================================
மூவண்ணம் = குறில் வண்ணம்/ நெடில் வண்ணம்/ சித்திரவண்ணம்
கொண்டல் = மழைமேகம்
பன்னீர் மழை, பாட்டோலை கம்பனுக்கு இவை 
இவரெழுதிய நூல்களின் பெயர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக